அரியலூரில் அக். 21 முதல் 26 வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு
இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம், அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளருக்கு பிளஸ் 2 தேர்ச்சி (50 சதவிகித மதிப்பெண்கள்), வயது 17.5 முதல் 23 வரை, சிப்பாய்க்கு (பொதுப்பணி) 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி (45 சதவிகித மதிப்பெண்கள்), வயது 17.5 முதல் 21 வரை, சிப்பாய் தொழில் நுணுக்கமறிந்தவர் பதவிக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஐ.டி.ஐ. படிப்பும் படித்திருக்க வேண்டும். வயது 17.5 முதல் 23 வரை.சிப்பாய், கிளார்க், ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு பிளஸ் 2 தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களும், 10 ஆம் வகுப்பு தேர்வில் 45 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். வயது 17-23 வரை.
இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல இயக்குநரை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dinamani